டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக 13.84 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.சாம்பியன் பட்டம் வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றி பெற்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக 13.84 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு ரூபாய் 7.40 கோடி பரிசாக கொடுக்கப்படுகிறது. மேலும் அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு 4.19 கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து அணியை விட இந்திய அணி கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக இந்தியா அணிக்கு ரூபாய் 4.50 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.