நீல நிறத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் பெரியார் நகர், நாராயண நகர், அம்மன் நகர், அப்பன் பங்களா, அய்யன் தோட்டம், கிழக்கு காலனி, மேற்கு காலனி, தெற்கு காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குழாய்களை திறந்தபோது நீல நிறத்தில் தண்ணீர் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையாளர் சசிகலாவின் உத்தரவின் படி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது திருவள்ளுவர் நகர் தனலட்சுமி மண்டபம் அருகே சாக்கடை கழிவுகள் குடிநீரில் கலப்பது தெரியவந்தது. இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் சாக்கடை கழிவுகளை அகற்றி குடிநீரில் கழிவுகள் கலப்பதை தடுத்துள்ளனர்.
மேலும் குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறை ஆலைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கபடாததால் கழிவு நீர் சாக்கடைகளில் கலந்து குடிநீரில் கலப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு பல வகையான நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.