நடிகை சாய் பல்லவியின் மூன்று பாடல்கள் யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாய் பல்லவி நடிகர் ராணாவுடன் இணைந்து நடித்துள்ள விராட பருவம் மற்றும் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸாகாமல் உள்ளது. நடிகை சாய் பல்லவி நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் சிறந்து விளங்கி வருகிறார் . இவர் நடனமாடும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் சாய் பல்லவியின் நடனத்தில் வெளியான 3 பாடல்கள் யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அதில் முதலாவதாக மாரி 2 படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ரவுடி பேபி பாடல் 1,150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் தெலுங்கில் பிடா படத்தில் இடம்பெற்ற வச்சிந்தே பாடல் 300 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. தற்போது லவ் ஸ்டோரி படத்தில் இடம்பெற்ற சாரங்க தரியா பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது . இந்திய அளவில் சாய்பல்லவியை தவிர எந்த ஒரு நடிகையும் இந்த சாதனையை படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.