17 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் சாராய வியாபாரிகளிடம் தொடர்ந்து வசூல் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சித்திரவேல் தலைமையிலான காவல்துறையினர் மதுவிலக்கு காவல்நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூபாய் நோட்டுகள் சிறிய பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் மொத்தம் 75,630 ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் மதுவிலக்கு அமல் பிரிவு பொறுப்பு ஆய்வாளர் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி, உதவி ஆய்வாளர் சேகர் உள்ளிட்ட பல பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்நிலையத்தில் பணியாற்றிய 14 காவலர்களை பணியிட மாற்றம் செய்யுமாறு டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.