வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே கோட்டை கிராமத்தில் பிஞ்சி என்கிற சரண்ராஜ் (33) என்ற சாராய வியாபாரி வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது தங்கை சஞ்சீவி (25) அந்தப் பகுதியில் உள்ள குழாய்க்கு தண்ணிர் பிடிக்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சாராய வியாபாரியான ராமகிருஷ்ணன் என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனை அறிந்த சரண்ராஜ் ராமகிருஷ்ணனை தட்டி கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் சரண்ராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சரண்ராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்போது மீண்டும் மருத்துவமனையில் வைத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மருத்துவமனை ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் சரண்ராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.