சென்னை- திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்யும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தென் மாநிலங்களில் முதன் முறையாக இதுவே சார்ஜிங் வசதியுடைய நெடுஞ்சாலை என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சில்லரை விற்பனை பிரிவு செயல் இயக்குனர் பி.எஸ்.ரவி கூறினார். இது குறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், பேட்டரியில் செயல்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச் சூழலை பாதிப்பதில்லை. இந்த வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசலால் ஏற்படும் செலவை விட 50 % குறைவு ஆகும். நாட்டில் தமிழகத்தில் தான் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பாக விழிப்புணர்வு அதிகம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை- திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் மிக அதிகமான போக்குவரத்து காணப்படுவதால் அந்த சாலையில் பாரத் பெட்ரோலியம், “எலக்ட்ரிக் வாகன பாஸ்ட் சார்ஜிங் காரிடார்” அமைத்துள்ளது. அதாவது நெடுஞ்சாலையின் 900 கிலோ மீட்டர் துாரத்தில் இருபுறமும் மீனம்பாக்கம், மறைமலைநகர், மேல்மருவத்துார், விழுப்புரம் கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை, திருச்சி சிறுகனுார், சென்னிமங்கலம், மதுரை ஒத்தக்கடை, மேலுார் என்று 10 இடங்களில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க்குகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையமும் தலா 100 கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கிறது. இதுவே தென் மாநிலங்களில் முதன் முறையாக எலக்ட்ரிக் வாகனங்ளுக்கு சார்ஜிங் வசதி உடைய நெடுஞ்சாலை ஆகும். அதனை தொடர்ந்து சார்ஜிங் மையத்தில் வாகனங்களுக்கு 30 நிமிடங்களில் சார்ஜிங் செய்ய முடியும். மேலும் தேவையை பொறுத்து கூடுதல் சார்ஜிங் மையங்கள் தொடங்கப்படும். மையத்தில் உணவகங்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், சார்ஜிங் செய்யும் நேரத்தை வாகன ஓட்டிகள் பயனுள்ளதாக மாற்றலாம். ஏற்கனவே வாகனத்தில் குறைந்த அளவில் பேட்டரி உள்ள நிலையில், சார்ஜ் செய்தால் கூடுதலாக 150 கிலோ மீட்டர் துாரம் செல்லலாம். இந்த வருடத்தின் இறுதிக்குள் பாரத் பெட்ரோலியம் நாடு முழுவதும் 1,200 சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டமிட்டு இருக்கிறது என்று பி.எஸ்.ரவி கூறினார்.