அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திர பதிவு செய்யப்படுகின்றன? இது போன்ற நிலை தொடர்ந்தால் அந்த துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. வழக்கின் பின்னணி என்னவென்றால் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசிடம் முறையான அங்கீகாரம் பெறாத மனைகளை சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்து வருகின்றனர்.. உரிய அங்கீகாரம் பெறாத மனைகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமில்லாமல், இதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சித் துறைகளில் அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என விதிகள் உள்ள நிலையில் தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளராக பணியாற்றும் உஷாராணி என்பவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து வருகிறார்.
ஆகவே இவ்வாறு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் இது போன்ற முறை கேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து தேனி பத்திரபதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கும் சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்து நிலுவையில் உள்ள நிலையில், இதுவரை அவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திர பதிவு செய்யப்படுகின்றன? இந்நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ச்சியாக முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவு துறையின் டிஐஜி நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கவும், உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.