ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் ரயில் மூலம் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் என ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த நிலையில் மின்சார ரயில் சேவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு உதாரணம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரயில் பெட்டியில் கேட்பாரற்று ஒரு குழந்தை கிடந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் பெண்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த பெண் குழந்தை மீட்டனர். பின்னர் அந்த குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.