தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தென் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக இன்று மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆகையால் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.. என்று மாவட்ட ஆட்சியருக்கு ட்வீட் போட்டுள்ளார். இதை பார்த்த கரூர் மாவட்ட ஆட்சியர், “தற்போது மழை குறைந்து விட்டது பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி.. உங்க நண்பர்களையும் கிளம்ப சொல்லுங்க.. நிறைய படிக்க வேண்டி இருக்கு” என்று பதிலளித்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.