இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், சாலை பாதுகாப்பு விழப்புணர்வுக்காக உலக டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஐந்து அணிகளில் ஓய்வுபெற்ற ஜாம்பவான் வீரர்களான சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான், லாரா, சந்தர்பால், தில்ஷன், ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீ, விளையாடவுள்ளனர்.
இந்தத் தொடர் பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்தது. இதனிடையே, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணம் திரட்டும் விதமாக நடத்தப்பட்ட பிஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டியில் லாரா, பிரெட் லீ, யுவராஜ் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இப்போட்டியில் பாண்டிங் தலைமையிலான அணிக்கு சச்சின் பயிற்சியாளராகவும் விளங்கினார். இதனால், சாலை விழிப்புணர்வு டி20 தொடர் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 7ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய அணி, லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது. பிஷ்ஃபயர் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களை மகிழ்வித்ததை போல சாலை விழப்புணர்வு டி20 தொடரிலும் லாரா, சச்சின் உள்ளிட்ட ஜாம்பவான்கள் மகிழ்விப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரில் மொத்தம் 11 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில், இரண்டு போட்டி வான்கடே மைதானத்திலும், தலா நான்கு போட்டிகள் டி – ஒய் படில், நவி மும்பை மைதானத்திலும் நடைபெறவுள்ளன. இறுதி போட்டி மார்ச் 22ஆம் தேதி கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா மைதானத்தில் நடைபெறுகிறது