ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சோமசுந்தரம் தெருவில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் லாலாபுரத்திற்கு சவாரி ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட பிறகு கள்ளிக்குடி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே முகமது சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஈஸ்வரன் என்பவர் மீது ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதனை அடுத்து படுகாயமடைந்த முகமதுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முகமதுவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.