ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாமண்டூரை சேர்ந்த நமிதா, உத்திரம்பட்டை சேர்ந்த கீதா, ஓச்சேரியை சேர்ந்த பிரேமலதா ஆகிய மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள், ஒரு செவிலியர் என 9 பேர் ஓச்சேரியில் இருந்து ஷேர் ஆட்டோவில் பனப்பாக்கம் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மேலப்புலம் மோட்டூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஆட்டோ மீது மோதுவது போல வந்ததால் ஓட்டுநர் ஆட்டோவை திருப்பியுள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்ததால் பிரேமலதா, நமீதா, கீதா செவிலியர் ஜமுனா ஆகிய 4பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று மாணவிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்து உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் உடன் இருந்தனர்.