சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பையில் இருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு கொங்கர்பாளையம் நோக்கி சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு ஆட்டோவை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த வாகனத்தில் 3 பெண்கள், 6 ஆண்கள் என 9 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் அத்தாணி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சதீஷ்குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதனை அடுத்து படுகாயமடைந்த 9 தொழிலாளர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.