மினி வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் அருகே இருக்கும் டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று ராமநாதபுரம் ரிங்ரோட்டில் சென்று கொண்டிருந்தது. இந்த மினி வேனை ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வாகனத்தின் பின்பக்க டயர் திடீரென பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த மினிவன் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினி வேனில் இருந்த மது பாட்டில்கள் அனைத்தும் உடைந்து சாலையில் மதுபானம் ஆறு போல ஓடியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆனந்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் உடைந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.