லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்திற்கு பழைய பேப்பர் லோடு ஏற்றி கொண்டு லாரி ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை குண்டூர் பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவரை ஒட்டி வந்துள்ளார். அவருடன் கிளீனரான ஆனந்த் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமராஜ் மற்றும் ஆனந்த ஆகிய இருவரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தியுள்ளனர். சுமார் 1 மணி நேரம் கழித்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.