திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வேனில் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஐயப்ப பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி சத்தம் போட்டனர். சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அறிந்த போலீசாரும், சுங்க சாவடி ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பக்தர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.