தலைமை ஆசிரியரை கொன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில் உடையார்பாளையம் சோழன் குறிச்சி சாலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து செல்வராஜின் மனைவியான உஷாராணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின் டி.ஐ.ஜி., மாவட்ட சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணை குறித்து தகவல் அறிந்தனர். பின்னர் டி.ஐ.ஜியின் அறிவுரைப்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்வராஜை கொன்றது ஜெயங்கொண்டத்தில் வசித்து வரும் வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது பணத்தேவைக்காக செல்வராஜை மறித்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். அப்போது செல்வராஜ் வெங்கடேசனுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆசிரியரை கொலை செய்த குற்றத்திற்காக வெங்கடேசை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேசிடமிருந்து கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.