கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுநெமிலி கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றொரு விவசாயியான குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே சென்ற போது சாலையில் பை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த 2 பேரும் மோட்டார் சைக்கிள் ஓரமாக நிறுத்திவிட்டு பையை எடுத்தனர்.
இதனையடுத்து பையை திறந்து பார்த்தபோது அதில் சில ஆவணங்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இரண்டு பேரும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று பையை ஒப்படைத்தனர். நேர்மையாக பணப்பையை ஒப்படைத்த குமாரையும், வேல்முருகனையும் போலீசார் பாராட்டியுள்ளனர்.