திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆனிமாத பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. இதில் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டதால் பல இடங்களில் குப்பைகள் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பாக கிரிவலப்பாதை, மாடவீதி மற்றும் அருணாசலேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் வாயிலாக குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை நகராட்சி ஆணையாளரான முருகேசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அதிக அளவில் தேங்கி கிடந்த குப்பைகளை ஊழியர்களிடம் அகற்றக் கோரி அவர் அறிவுரை வழங்கினார். மேலும் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேர்களை சுற்றி அமைக்கப்பட்ட தகரசீட்டுகள் மேல் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும், அங்கிருந்த தண்ணீர் தொட்டிகள் மேல் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் அகற்ற உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் கிரிவல பாதை மற்றும் மாட வீதிகளிலுள்ள கடைகளில் குப்பைகளை சாலைகளில் கொட்டகூடாது எனவும் மீறினால் அவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். அதுமட்டுமின்றி கிரிவலப் பாதை முழுவதும் தூய்மையாக வைத்துக்கொள்ள பக்தர்களுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.