சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் மீது ஏறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையத்தில் மனோஜ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் தனது பெண் தோழியான ஆர்த்தி(19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து போளுவாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் தில்லைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கட்டுமான பணிக்காக சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த எம் சாண்ட் மணல் மீது ஏறி மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்தது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மனோஜ் மற்றும் ஆர்த்தியின் தலை மீது பின்னால் வந்த பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.