மதுரையில் சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நகரப்பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்காக தனி குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையாளர்கள் மாடுகளை அழைத்துச் செல்லாவிட்டால் ஏலம் விடப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.