சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள நாடார் தெருவில் ரம்யாதேவி என்ற மூதாட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு அருகே உள்ள தனது மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து செல்வதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து ரம்யாதேவி ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். மேலும் சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்ட பகலில் மூதாட்டியின் சங்கிலியை பறித்த சம்பவம் பொதுமக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.