லாரி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் புறவழி சாலையில் நாகர்கோவிலில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 4 பேரில் ஓட்டுநர், மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் 2 பேர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி வெளியேவர முடியாமல் தவித்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கிய விஜயன், சாகிர் உசேன் ஆகிய 2பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.