நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையில் நடந்து சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தில் காட்டு யானையின் நடமாட்டத்தால் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கூடலூர் அருகே உள்ள கொக்கால் பகுதியில் வசிக்கும் கமலா அம்மாள் என்பவர் அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது புதரில் மறைந்திருந்த ஒற்றை யானை அவரைத் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரிடம் யானையை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். யானை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் நாள்தோறும் ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.