வேளாங்கண்ணி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரம் கைகாட்டி கிழக்கு கடற்கரை பகுதியில் ராமன் மற்றும் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 19 வயதில் தமிழ்ச்செல்வி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது தாயுடன் தமிழ்ச்செல்வி அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென அவர்கள் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த இரண்டு பேரும், உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு வளர்மதியை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனி ஆண்டி மகன் பழனிசாமி என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு விபத்தில் காயங்கள் ஏற்பட்டு உள்ளதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.