வேன் மோதி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிச்சையம்மாள் திருவையாறு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் திடீரென பிச்சையம்மாலின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சையம்மாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிச்சையம்மாலின் உறவினர்கள் வேன் ஓட்டுனரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பிச்சையம்மாலின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து பிச்சையம்மாலின் மகன் சோமசுந்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் ஓட்டுநர் வைகுண்டமூர்த்தி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.