Categories
மாநில செய்திகள்

சாலையில் நின்று வேலை கேட்ட மாற்றுத்திறனாளி பெண்… 2 மணி நேரத்தில் அரசு வேலை… முதலமைச்சருக்கு குவியும் பாராட்டு…!!!

சாலையில் நின்று வேலை கேட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இரண்டு மணி நேரத்தில் அரசு பணி ஆணையை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்ட பணிகளை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்று கொண்டிருக்கும்போது வழியில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் சாலையோரம் கையில் மனுவுடன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி அந்த பெண்ணை அருகில் வரவழைத்து விசாரித்தார்.

அந்தப் பெண் தான் முத்தையா புரத்தை சேர்ந்த மாரீஸ்வரி என்றும் கணவர் சின்னத்துரை கூலி வேலை செய்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை இருப்பதால், கணவரின் கூலி வேலை வருமானம் குடும்பத்துக்கு போதாத காரணத்தால் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார்.

அந்தப் பெண் அளித்த மனுவை வாங்கிக் கொண்ட முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். அதன்பிறகு சுகாதாரத் துறையின் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் அந்தப் பெண்ணுக்கு வழங்கினார். அதனை சிறிதும் எதிர்பார்க்காத அந்த பெண் அரசு வேலை கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அது மட்டுமன்றி அந்த பணியின் மூலமாக மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும், அதன்மூலமாக குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். கோரிக்கை மனு வழங்கிய இரண்டு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |