சாலையில் ரூபாய் நோட்டுகளை வாலிபர் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலை பகுதியான பெஜிலிட்டி அமைந்துள்ளது. இங்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த வாலிபரின் கையில் ஏராளமான ரூபாய் நோட்டுகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனால் பயந்து போன வாலிபர் தான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர்.
இது தொடர்பாக பர்கூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரிடம் விசாரணை செய்ததில் அவர் ஹிந்தியில் ஏதோ பேசினார். அப்போது வாலிபருக்கு மனநலம் சரியில்லாதது தெரிய வந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் வாலிபரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து விட்டு சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் வைத்திருந்த பணம் திருட்டு பணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.