முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள நல்கிராம வயல் பகுதியில் கலைமுத்தன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் தாமோதரன் பட்டினம் பகுதிக்கு சென்ற கலைமுத்தன் அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக வந்த கார் கலைமுத்தன் மீது மோதி விட்டு வேகமாக சென்றது.
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த கலைமுத்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து சென்ற தொண்டி காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத காரை தேடி வருகின்றனர்.