நான்கு வழி சாலையை கடக்க முயன்ற வணிக வரித் துறை ஊழியர் கார் மோதிய விபத்தில் உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மோதிராபுரம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரகுமார். இவர் பொள்ளாச்சி வணிகவரித்துறையில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதாடெய்சிராணி. இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் தமிழ்மணி கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் சக்தி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்மணி வீட்டிற்கு சித்திர குமார் லதா டெய்சி ராணி மற்றும் உறவினர்கள் காரில் சென்றுள்ளனர்.
அங்கு கணவர் சித்திரகுமாரை மகள் தமிழ்மணி வீட்டில் இருக்க சொல்லி விட்டு, அவர்கள் வந்த காரில் கிணத்துக்கடவு பகுதிக்கு ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அதன்பிறகு பொள்ளாச்சிக்கு செல்ல கோவை- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அரசம்பாளையம் அருகே காரை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு வரும்படி சித்திரைகுமாருக்கு லதாடெய்சிராணி செல்போனில் தகவல் கொடுத்துள்ளர்.
இதனையடுத்து சித்திரகுமார், ஜெயபிரகாஷ் என்பவரின் பைக்கில் வந்து பொள்ளாச்சி கோவை ரோட்டில் அரசம்பாளையம் பிரிவு விநாயகர் கோவில் முன்பு இறங்கி எதிரே உள்ள காருக்கு செல்ல ரோட்டை கடக்க முயன்ற போது பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் சித்திரகுமார் மீது மோதியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லதா டெய்சி ராணி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சித்திரைகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சித்திரகுமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.