அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் இருந்து 42 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவரும் கண்டக்டராக வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவரும் மாறி மாறி பேருந்தை ஓட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அது இருவழிப்பாதை என்பதால் எதிரே வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை ஓட்டி சென்ற சீனிவாசன் இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் சீனிவாசன், பயணிகளான அய்யனார், ஜமுனா, சந்தோஷ், புனிதா உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 19 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து விபத்துக்குள்ளான பேருந்தை காவல்துறையினர் கிரேன் உதவியுடன் மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.