செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை ஓரம் காலியிடத்தில் மிகவும் உடல் மெலிந்த நிலையில் ஒரு ஒட்டகம் சுற்றிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வண்டலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த ஒட்டகத்தை மீட்டனர். மேலும் அந்த ஒட்டகம் திடீரென்று இங்கு எப்படி வந்தது?. யாராவது ஒட்டகத்தை இரவு நேரத்தில் வாகனத்தில் கடத்தி வரும்போது காவல்துறையினருக்கு பயந்து இறக்கி விட்டு சென்றார்களா..? என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.