பாளையங்கோட்டையில் நேற்றிரவு கட்டிட தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது அண்ணன் சேர்மன் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை அழைத்து அவருடன் தகராறு செய்தனர். பின்னர் திடீரென்று அந்த கும்பல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இசக்கிமுத்து சரமாரியாக வெட்டியது. இதை தடுக்க சென்று சேர்மனையும் வெட்டிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சேர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாநகர காவல்துறையினர் இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இசக்கிமுத்து அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கேலி செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பாக கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.