தீ விபத்து ஏற்பட்டதால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமானது.
சென்னை மாவட்டத்திலுள்ள பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சென்னீர்குப்பம் பைபாஸ் சர்வீஸ் சாலையை வட்டி விபத்தில் சிக்கிய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். அதனருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென குப்பைகளில் தீப்பிடித்து அங்கு நின்ற வாகனங்களில் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.