வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் அனைத்து சீரமைப்பு பணிகளையும் முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று வருகை புரிந்தார். அவர் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் மத்தியாஸ் ரோடு பகுதியில் இருந்து மேலராமன்புதூர் வரை நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின்படி ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பேயன்குழி பகுதியில் இருக்கும் இரட்டைகரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இதனால் ரூபாய் 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 3 ராட்சத இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டது. தற்போது முடிவடைந்த இந்த பணியையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்தார். இதன்பிறகு புத்தனார் கால்வாய் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணியையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது அரசியல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.