நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இன்று முதல் திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் டிக்கெட் எடுப்பதற்காக கடலூரை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இன்று காலை 11 மணியளவில் அண்ணா பாலம் அருகே தியேட்டருக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் டிக்கெட் தற்போது கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
அதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.