வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை சின்ன எட்டிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் துரைசாமி மகன் குள்ளையன் (28). இவருக்கும் ஜார்த்தான் கொல்லை ஊராட்சிக்குட்பட்ட எலந்தம்புதூர் மலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகள் காஞ்சனாவுக்கும் (22) சென்ற 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து காஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எலந்தம்புதூர் மலை கிராமத்திலுள்ள தாய் வீட்டில் இருந்த காஞ்சனாவுக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பிரசவவலி ஏற்பட்டது.
இதனிடையில் காஞ்சனாவின் கணவர் வெளியூருக்கு கூலிவேலைக்கு சென்று இருந்ததால் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்னதாகவே ஆம்புலன்ஸ் பழுதானதால் அது வரவில்லை. இதன் காரணமாக உறவினர்களே பிரசவ வலியால் துடித்த காஞ்சனாவை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையில் சரியான சாலைவசதி இல்லாததால் அவசரமாக செல்ல முடியவில்லை. இதனால் வலியால் துடிதுடித்த காஞ்சனாவுக்கு வழியிலேயே ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அதன்பின் காஞ்சனாவுக்கும் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்ச ந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் காவல்துறையினர் இறந்த காஞ்சனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். ஆனால் கலெக்டர் மற்றும் தாசில்தார் நேரடியாகவந்து சாலை வசதி ஏற்படுத்தி தருவது தொடர்பாக வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே உடலை ஒப்படைப்போம் என கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து காஞ்சனாவின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ஜார்த்தான் கொல்லை ஊராட்சிக்குட்பட்ட 15 கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். பீஞ்ச மந்தை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. எனினும் சரியான சாலை வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றோம். அந்த சுகாதார நிலையத்தில் பகலில் மட்டும்தான் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்கின்றார்கள். இரவு வேளையில் மருத்துவமனையில் தங்குவதில்லை. இதன் காரணமாக இது போன்ற இறப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது.
ஆகவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் தங்கி பணிசெய்ய கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பகுதியில் சாலைவசதி இருந்திருந்தால் பிரசவத்தின்போது தாய், சேய் இருவரையும் காப்பாற்றி இருக்கலாம். ஆகையால் தார்சாலை அமைக்க வேண்டும். இதனிடையில் பீஞ்சமந்தை மலைப் பகுதிக்கு தார்சாலை அமைக்க ரூபாய் 5 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரையிலும் சாலை அமைக்கவில்லை” என்று பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.