முத்தூட் நிறுவனத்தில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ளது முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனம். இந்நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் வந்த மர்ம நபர்கள் வாடிக்கையாளர்கள் போல் நுழைந்துள்ளனர். அதன் பிறகு அங்கிருந்த 4 பணியாளர்களை துப்பாக்கியால் மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் சாவியை பறித்து 12 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகைகள் மற்றும் 90 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
இந்த மர்ம கும்பலை பிடிப்பதற்காக 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஹைதராபாத்தில் பிடிபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹைதராபாத் காவல்துறையினர் உதவியுடன் தமிழ்நாடு காவல்துறை அவர்களை பிடித்ததோடு அவர்களிடமிருந்து தங்கம் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.