விருதுநகர் மாவட்டத்திலுள்ள பெரிய வாடியூர் கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாயி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், 5 மகள்களும் இருக்கின்றனர். கடைசி மகளான நாகேஸ்வரி மட்டும் சுப்பிரமணியத்தின் வீட்டு அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சுப்பிரமணியத்தின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த போது மன உளைச்சலில் அழுது கொண்டிருந்த கருப்பாயி திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.