சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் 4வது நாளாக இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளியன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், போலீசாரின் தடியடியை கண்டித்தும் வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களின் போராட்டம் 4-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகுதமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இதில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள், டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு மீதான பேச்சுவார்த்தை இன்று சட்டப்பேரவையில் நடைபெற உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.