Categories
மாநில செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் மெட்ரோ பகுதியில் ஏராளமான பெண்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக வடஇந்தியாவில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், புதுவை, கேரளம் ஆகிய இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அந்தந்த மாநில முதல்வர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த போராட்டமானது தமிழகத்தில் பரவி வருகிறது.

கடந்த வாரம் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதால், இதனை கண்டித்து மேலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே டெல்லியில் ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தது.

ஷாகீன்பாக்கில் கடந்த 2 மாதங்களாக பெண்களும், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒரு இடத்தில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மெட்ரோ பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

Categories

Tech |