குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு வாரமாக திமுக கையெழுத்து இயக்கம் நடத்தியது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,”நாம் எவ்வளவு சரியான பாதையில், முறையாகவும் எச்சரிக்கையாகவும் அளந்து அடியெடுத்து வைத்துச் செல்கிறோம் என்பதை, அரசியல் எதிரிகளின் அலறலில் இருந்தே அறிந்து கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு இவற்றிற்கு எதிராக, தமிழக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என ஜனவரி 24ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பிப்ரவரி 2ஆம் நாள் தொடங்கி பிப்ரவரி 8ஆம் நாள் வரை நாள்தோறும் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.
மக்களின் பெரும் ஆர்வத்துடனும் தன்னிச்சையான பங்கேற்புடனும் கையெழுத்து இயக்கம் களிப்புறத்தக்க வெற்றி பெற்றிருப்பதை, நம்மைவிட நமது அரசியல் எதிரிகள் நன்றாக உணர்ந்து விட்டார்கள். மாநில அடிமை அரசில், நேரடி பா.ஜ.க. பிரதிநிதி போலவே செயல்படும் அமைச்சர் ஒருவர், “தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு ஏன் தடை செய்யாமல் இருக்கிறது?” என்று வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார். மத்திய பா.ஜ.க அரசில், முன்னாள் மாண்புமிகுவாக இருந்து மக்களிடம் தோல்வி அடைந்த மூத்த தலைவர் ஒருவர், “தி.மு.க. கட்டாயக் கையெழுத்து இயக்கம் நடத்துகிறது” என்று பேசியிருக்கிறார்.
கட்டாயமாகக் கையெழுத்து வாங்குவது, மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்த ஓய்வு பெற்ற நீதிபதிக்கு கட்டாயமாக பா.ஜ.க. உறுப்பினர் அட்டையைக் கொடுப்பது, மிஸ்டுகால்களை நம்பியே உறுப்பினர் எண்ணிக்கை பற்றி உறக்கத்தில் மனக்கணக்கு போடுவது என செயல்படுகிறவர்களுக்கு, தி.மு.கழகமும் தோழமைக் கட்சிகளும் மேற்கொண்ட கையெழுத்து இயக்கமும், அதற்கு மக்கள் காட்டிய வரவேற்பும் ஆர்வமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, இப்படித்தான் புலம்பி ஒப்பாரி வைத்திடச் செய்திடும்.
பன்மைத் தன்மையும், மதச்சார்பின்மையும் ஊறிப்போன இந்தியாவைப் பாதுகாக்கும் அரசியல் சாசனத்திற்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஆபத்துகளை மக்களிடம் விளக்கி, அவர்களின் சம்மதத்துடனும் முழு மனதுடனும் கையெழுத்துப் பெற வேண்டும் என்பதை கழக நிர்வாகிகளுக்கு விளக்கி, அதுதொடர்பாக அந்தந்த மாவட்ட-ஒன்றிய-பகுதி நிர்வாகிகள் தோழமைக்கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகே, பிப்ரவரி 2ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
கொளத்தூர் தொகுதியில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்ற நான், அதுகுறித்து உரையாற்றிய போது, மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதார முன்னேற்றம் – வேலைவாய்ப்பு குறித்து எதுவும் இல்லை என்பதை விளக்கி, இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்குமான பட்ஜெட் என்பதை எடுத்துரைத்து, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, வளர்ச்சிக்கான கூறுகளின் தேக்க நிலைமை, வேலையின்மை ஆகிய பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ள கொடுமைதான், குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பதை எடுத்துரைத்தேன்.
சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் மக்கள் ஆகியோருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தி.மு.கவும் தோழமைக் கட்சியினரும்-பல மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளும் எதிர்த்து வாக்களித்த நிலையில், தமிழகத்தை ஆளுகின்ற அடிமை அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும், அதன் கூட்டணியான பா.ம..கவின் ஓர் உறுப்பினருமாக, 12 பேரின் ஆதரவினால்தான் இந்தக் கொடூர சட்டம் நிறைவேறியது என்பதையும், இல்லையென்றால் இப்படியொரு ஆபத்தான நிலை சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஏற்பட்டிருக்காது, நாடு முழுவதும் பதற்றமும் போராட்டமும் பரவியிருக்காது எனவும் எடுத்துக்காட்டினேன்.
சி.ஏ.ஏ.வை நாடாளுமன்றத்தில் ஆதரித்த பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள்கூட தற்போது உணர்ந்து அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதையும், பல மாநிலங்களின் சட்டப் பேரவைகளில், இந்த சட்டத்திற்கு எதிராகத் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருப்பதையும், குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் துணிச்சலாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் முதல்வர் பினராயி விஜயனின் உறுதிப்பாட்டையும் விளக்கி, அதுபோல தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாம் வலியுறுத்தியும், அடிமை அ.தி.மு.க. அரசு அலட்சியப்படுத்தியதால்தான், சிஏஏவுக்கு எதிராக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்தைப் பெறும் இயக்கம் நடைபெறுகிறது என்பதையும் மக்களிடம் சொன்னேன். எதற்காக இந்த இயக்கம் என்பதை விளக்கிய பிறகே மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்துக்கள்-முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் எனப் பலரும் மத எல்லைகளைக் கடந்து, இந்தியாவைக் காத்திட வேண்டும் என்ற உண்மையான தேசப்பற்றுடன் கையெழுத்திட்டு ஆதரவு தந்தனர்.
தேர்தல் களமாக இருந்தாலும், கையெழுத்து இயக்கமாக இருந்தாலும், தமிழக மக்கள் தி.மு.கழகத்திற்கு அளித்துவரும் பேராதரவு கண்டு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் நடுங்குகின்ற காரணத்தால் தான், இதனைத் தடை செய்ய வேண்டும் என்றும், கட்டாயக் கையெழுத்து என்றும், தங்கள் நிலையைவிட்டு பலபடிகள் கீழே இறங்கி விமர்சனம் செய்கிறார்கள்.
மக்களுக்கு எதிரான-நாட்டை மதரீதியாகத் துண்டாடும் சி.ஏ.ஏ உள்ளிட்டவற்றை எதிர்த்து கழகத்தின் போராட்டம் தொடரும். மக்களின் ஆதரவுடன் – மக்களுக்கு எதிரான எதையும் முறியடித்து – மக்களின் நலன் காப்பதற்குத் தொடர்ந்து பாடுபடுவோம்! என தெரிவித்துள்ளார்