வயதான தம்பதியினரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளமங்கலம் தெற்கு தெருவில் செல்லையா(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் கடையை பூட்டி விட்டு வாசலில் இருக்கும் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் பனங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்ரம்(20), ராஜதுரை(20) சசிசுதன்(22) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சிகரெட் வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது சிகரெட் இல்லை என கூறியதால் வாலிபர்கள் வயதான தம்பதியினரை தாக்கி கட்டிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதனை அடுத்து கடையில் இருந்த காலி சோடா பாட்டில்களை உடைத்து அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வயதான தம்பதியினரை தாக்கிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.