நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் அடுத்த நாகூர் அருகே இருக்கின்ற வெங்கடகால் கீழ் தெரு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 21 வயதுடைய முருகன் என்ற மகன் உள்ளான். பட்டப்படிப்பு முடித்த இவருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னர் சென்னையில் இருக்கின்ற ஒரு மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதனால் அவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் முருகனால் சென்னைக்கு சென்று சிகிச்சை பெற இயலவில்லை.
அதனால் முருகனுக்கு மீண்டும் முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது பெற்றோரிடம் தன்னை சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது பெற்றோரிடம் சிகிச்சைக்கு தகுந்த பண வசதி இல்லாத காரணத்தால் முருகனை சென்னைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அதனால் முதுகு வலி தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்ட முருகன் நேற்றுமுன்தினம் தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
அதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முருகனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தான். இதுபற்றி நாகூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு பணமில்லாத காரணத்தால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.