சென்னை மாவட்டத்தில் உள்ள சூரப்பட்டு அன்னை நகரில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான வேலாயுதத்தை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த வேலாயுதம் மீண்டும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழி வாங்குவதாக கூறி கைகளால் தனது மனைவியை சரமாரியாக தாக்கி சுவரில் தள்ளியுள்ளார். இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டு ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று ரேவதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.