சிகிச்சை அளிப்பதாக நடித்து போலி மருத்துவர் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள முத்தா புதுப்பேட்டை எம்.இ.எஸ் ரோட்டில் வேணி என்பவருக்கு சொந்தமான மருந்து கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு அருகில் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் புதிதாக கிளினிக் தொடங்கி தன்னை டாக்டர் என கூறி கொண்டார். கடந்த 2-ஆம் தேதி பிரபுவின் கிளினிக்கிற்கு பிரியா என்ற பெண் சென்றுள்ளார். இதனை அடுத்து அறையில் வைத்து பிரபு பிரியாவிற்கு குளுக்கோஸ் எற்றியுள்ளார். சிறிது நேரத்தில் பிரியா அயர்ந்து தூங்கி விட்டார். இந்நிலையில் கண்விழித்து பார்த்த போது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலி காணாமல் போனதை கண்டு பிரியா அதிர்ச்சி அடைந்தார். மேலும் சிகிச்சை அளித்த பிரபுவும் அங்கு இல்லை.
இதுகுறித்து பிரியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த பிரபுவை கைது செய்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது பிரபு பல்வேறு கிளினிக்குகளில் மருத்துவர்களுக்கு உதவியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விவரங்கள், மாத்திரை, மருந்துகளை பிரபு தெரிந்துகொண்டு வேணியின் மருந்து கடைக்கு அருகிலேயே கிளினிக் நடத்தியுள்ளார். பிரபு போலி மருத்துவர் என உறுதியான பிறகு காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.