உடல்நலக் குறைவால் அவதியடைந்த பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ராமையா கவுண்டர் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெனோவா, கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் ஜெனோவா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த ஜெனோவா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.
இதனையடுத்து ஜெனோவாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஜெனோவா வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது ஜெனோவா உடல் கருகி பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெனோவா உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.