உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவுசெய்தார். இதனையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான்மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் சென்ற ஏப்ரல்மாதம் ஒப்பந்தம் செய்தது. இதனிடையில் டுவிட்டரிலுள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையிலுள்ள கணக்குகள் உட்பட சில விபரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான்மஸ்க் கோரிக்கை விடுத்தார். எனினும் 2 மாதங்கள் ஆகியும் எலான்மஸ்க் கேட்ட விபரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்துவந்தது.
அதன்பின் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான்மஸ்க் கடந்த 9ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார். டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான்மஸ்க் கைவிட்ட சூழ்நிலையில் அவர் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான்மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் சிக்கலை ஏற்படுத்த முயற்சிப்பதாக எலான்மஸ்க் டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வாலிடம் தெரிவித்ததாக டுவிட்டர் தாக்கல் செய்த வழக்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பராக் அகர்வால் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஎப்ஓ நெட் செகல் போன்றோருக்கு எலான்மஸ்க் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் “உங்கள் வழக்கறிஞர்கள் இந்த உரையாடல்களைப் பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்துகின்றனர். அதனை நிறுத்த வேண்டும்” என்று மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார். எலான்மஸ்க் மற்றும் டுவிட்டர் நிறுவனத்துக்கு இடையிலான மோதல்கள் உலகம் முழுதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.