இலங்கை நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. இங்கு அன்னியசெலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாங்க முடியவில்லை. இதன் காரணமாக அப்பொருட்கள் கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்டவரிசையில் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தவிர்க்க பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனிடையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அவசியம் இன்றி பயணம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.
இன்னும் பல்வேறு எரிப்பொருள் சிக்கன நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எரிப்பொருள் தட்டுப்பாடால் அந்நாட்டு நாடாளுமன்றத்தினுடைய அலுவல் நாட்களும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாரம் 3 தினங்கள் மட்டும் நாடாளுமன்றம் இயங்கும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தது. வரும் 6ஆம் தேதி அத்தியாவசிய பொதுசேவைகள் சட்டம், விவாதம் இன்றி நிறைவேற்றப்படுகிறது. அதேநாளில் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஆகஸ்டு மாதம் வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட எரிபொருள் இறக்குமதிக்காக அந்நாட்டு ரூபாய்.885 கோடி செலுத்தவேண்டி உள்ளதாக இலங்கை மின்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறினார். இன்று (ஜூலை 4)முதல் பல வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அந்த பணத்தை தரவேண்டும் என அவர் கூறினார். இந்நிலையில் எரிப்பொருள் தட்டுப்பாட்டால் அந்நாட்டில் பள்ளிகளுக்கு இந்த வாரம் முழுதும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கல்வியமைச்சகம் வெளியிட்டது. அரசு பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் போன்றவற்றுக்கு இந்த விடுமுறையானது பொருந்தும். இதன் காரணமாக வீணாகும் பள்ளிநேரம், அடுத்த கோடை விடுமுறை காலத்தில் ஈடுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.