இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா, மகன்கள் தர்ஷன், அட்சயன் என அனைவரும் வல்லத்திரா கோட்டையில் நடைபெற இருந்த தனது உறவினர் வீடு திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர் சித்தூர் பாலம் அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் அனிதா, தர்ஷன், அட்சயன் ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் விபத்தில் பலியான சரவணன் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார் என்பதை போலீசார் அறிந்து கொண்டனர்.